வெகுவாக அழிந்து வரும் "உலக்கை" தயாரிப்பு தொழில்


முந்தைய காலத்தில் நெல் மற்றும் தானியங்களை குத்த பயன்பட்ட உலக்கையை இன்று பார்ப்பதே அரிதாகிவிட்டது.

முந்தைய காலத்தில் நெல் மற்றும் தானியங்களை குத்த பயன்பட்ட உலக்கையை இன்று பார்ப்பதே அரிதாகிவிட்டது. "உலக்கை" தயாரிப்பு தொழிலும் வெகுவாக அழிந்து வருவதால், தொழிலாளர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஆச்சா மரம் போன்ற திடமான மரத்தின் உள் பகுதியை கொண்டு உலக்கை தயார் செய்யப்படுகிறது. அக்காலத்தில் உணவு தானிய வகைகளான கம்பு, நெல் போன்றவற்றை குத்த "உலக்கை"யும், ராகி அரைக்க "கல்லும்" வெகுவாக பயன்பட்டது. நீண்ட காலமாக நெல், கம்பு குத்துவதற்காக பயன்பட்ட உலக்கையின் தேவை தற்காலத்தில் குறைந்து விட்டது.விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, அரிசி அரைக்க மிஷின், மாவு அரைக்க கிரைண்டர், மிக்ஸி என எந்திர ஆதிக்கம் அதிகரிப்புதான் காரணம். உலக்கை கொண்டு நெல், கம்பு குத்துவதால், உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன், நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ தேக பயிற்சியாகவும் அது அமைந்தது.ஆனால், தற்காலத்தில் வியர்வை வராமல், கஷ்டப்படாமல் வேலை செய்ய வேண்டும் என்பதில், பெண்கள் மிக கவனமாக இருக்கின்றன. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின் போன்ற எந்திரங்களை பயன்படுத்தும் அவர்களுக்கு, நடுத்தர வயதிலேயே பல நோய்கள் ஏற்படுகிறது. நெல் குத்த பயன்படும் உலக்கை அந்தியூரில் தயாரித்து விற்கப்படுகிறது. 40 ஆண்டுக்கு முன், வெகு சிறப்பாக நடந்து வந்த உலக்கை தொழில், தற்போது முடங்கிவிட்டது. ஆனாலும், இதையே தொழிலாக செய்து வரும் தொழிலாளர்கள், இதை விட்டு மாறாமல் தொடர்ந்து உலக்கை தயார் செய்கின்றனர். அந்தியூரில் செய்யப்படும் உலக்கை ஒன்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐந்து அடி நீளமும், கைக்கு அடக்கமான விட்டமும் உடையது. கடந்த காலத்தில் நெல், கம்பு குத்த பயன்பட்ட உலக்கை, தற்காலத்தில் திருமண சடங்குக்காக மட்டுமே அதிகம் வாங்கி செல்கின்றனர். அதிலும், கிராமப்புற மக்கள் மட்டுமே சடங்குக்கு வாங்கி செல்கின்றனரே தவிர, நகர்ப்புற மக்கள் கண்டு கொள்வதில்லை. மாதம் 100க்கும் மேற்பட்ட உலக்கை விற்கப்பட்ட நிலையில், தற்போது, 35 உலக்கை"களே விற்பனையாகின்றன. இத்தொழில் வெகுவாக வீழ்ச்சியடைந்து வருவதால், தொழிலாளர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். உலக்கை செய்யும் தொழிலில் ஈடுபடும் சம்பத் கூறியதாவது: கடந்த காலத்தில் நெல், கம்பு குத்த உலக்கை அதிகளவில் பயன்பட்டது. "ஆர்டர்" பேரில் நிறைய உலக்கைகள் தயார் செய்து கொடுத்தோம். தற்போது, கிரைண்டர், மிக்ஸி போன்ற எந்திரங்களின் ஆதிக்கத்தால், இத்தொழில் அழிந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.