ஈரோடு



பெயர்க் காரணம்

பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.35 வடக்கு 77.73 தெற்கு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது.ஈரோட்டின் மொத்த 8,16,191 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது
இந்திய 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சராசரியாக30 லட்சம் மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இம்மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 65.5% ஆகும

வரலாறு

கோவை மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஈரோடு நகராட்சி 01.01.2008 முதல் "ஈரோடு மாநகராட்சி" யாக தரம் உயர்த்தப்படுகிறது வரலாற்றுச் சிறப்பு பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது. கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களையும், கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியிருப்பதே கொங்கு நாடு ஆகும். இப்பகுதிகளை கொங்கர் ஆண்டு வந்தனர். இங்குள்ள தாராபுரத்தில் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. உரோம பேரரசுக்கும் இம்மாவட்ட வணிகர்களுக்கும் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது வரலாற்றறிஞர்களின் கணிப்பு. இதுபோலவே நொய்யல் ஆற்றின் கரையில் சென்னிமலைக்கு அருகே உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல வண்ண மணிகள், ஓடுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களை சோழர்கள் 9-ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் கொங்குவேளிர் பெருங்கதையையும்; பவணந்தி நன்னூலையும்; அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரையையும் எழுதியுள்ளனர். சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்பு சுல்தான் முதலியோர் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். இக்காலங்களில் பட்டக்காரர் வசம் வரிவசூலிப்பு இருந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்றாகும். ஈரோடு இதன் தலைநகராகும். இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திண்டுக்கல் மாவட்டம், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன. 1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்றழைக்கப்பட்டது.

புகழ்பெற்ற மனிதர்கள்

ஈ. வெ. ராமசாமி : பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், தந்தை பெரியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.

இராமானுசன் : சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித இயல் இதழ் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்



இம்மாவட்டம் இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மஞ்சளுக்கான முக்கிய சந்தையாகும். மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டு, கர்நாடக மாவட்டங்களிலிருந்தும் வருகிறது. 'ஊத்துக்குளி வெண்ணெய்'யும', 'காங்கேயம் காளை'களும' புகழ் பெற்றவை.
ஈரோட்டில் வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது. இதன் அருகில் முட்டையைப் பொடியாக்கி பேக்கிங் செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது. ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

விவசாயம்

மொத்த விவசாய பரப்பு 9 இலட்சம் ஏக்கர்; முக்கிய விளை பொருட்கள்: நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள். விவசாயத் தொழிலாளர்கள்: 10,78,256 பேர்கள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் சென்றாண்டு ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றது.

தொழில்கள்

பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.
* கைத்தறி - நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. சென்னிமலை, பவானி ஆகிய இடங்களில் ஜமுக்காளம், போர்வைகள், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது. கோபிச்செட்டிப் பாளையம், தாளவாடி, சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு பருத்திப் புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கி, வேட்டிகள் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.
* சர்க்கரை - சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தபாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
* மரம் அறுப்பு - சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
* மீன்பிடிப்பு - ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன. பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது. ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது. இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.
* எண்ணெய் - எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.
* கால்நடை வளர்ப்பு - ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரியமாகவே கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் நடந்து வருகிறது. தமிழக மாடு வகையில் 'காங்கேயம்' உலகப் புகழ்பெற்றது. இது போலவே பர்கூர் இனக் காளைகளும் தற்போது அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தாளவாடி, பர்கூர், அந்தியூர் பகுதிகளில் குறும்பை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. கண்ணபுரத்தில் பெரிய மாட்டுச் சந்தையும்; அந்தியூரில் குதிரைச் சந்தையும் ஆண்டுதோறும் கூடுகின்றன.

சுற்றுலா தலங்கள்



பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை. வரலாற்று சுற்றுலா தலங்கள்: அரச்சலுர் - கல்வெட்டுகள்; பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல் புதைபொருள் ஆய்வு இடம்.
தாளவாடி மலை

இது இம்மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமாகும். இயற்கை எழில் போலவே வனவிலங்குகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்குண்டு.
பவானி முக்கூடல்

காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர். வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம். இரண்டு நதிகளும் கூடும் இடத்தில் சங்கமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. துரத்தில் இருக்கிறது. தேவார காலத்தில் இவ்வூரை திருநணா என்றுஅழைக்கப்பட்டிருப்பதை சம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.
தீரன் சின்னமலை மணிமண்டபம்

தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட வீரர். இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய திருத்தல‌ங்கள்



சென்னிமலைக் கோவில்

மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 'அகத்தியர்' என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் துண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை 'சன்னியாசி குகை' என்று மக்கள் அழைக்கின்றனர்.

சிவன் மலைக் கோவில்

காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா - இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும்.

தொண்டீசுவரக் கோவில்

ஈரோடு நகரத்திலே உள்ளது. மூலவர் திருநாமம் ஈரோடையப்பர். இறைவி: வாரணியம்மை. 12-ஆம் நுற்றாண்டில் கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன் மார்களுக்கும் மண்டபம் அமைந்துள்ளது. 63க்கும் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய குலம், நட்சத்திரம், காலம், ஊர், பெயர் விவரங்களில் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன. தட்சிணா மூர்த்தி சிலை காணத்தக்கது. பஞ்சபூத தலங்களின் சித்திரங்கள் அழகு மிளிர வரையப் பெற்றுள்ளன. இதில் தெய்வயானையுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார். கருவறையிலுள்ள சிவலிங்கத்தை, கதிரவன் மாசி மாதத்தில் 25,26,27 நாட்களில் தன் ஒளிக்கரத்தால் திருமேனியைத் தொட்டுப் பார்க்கிறான். வன்னிமரத்தின் அடியில் வாரணியம்மையின் பழைய உரு காணப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இறைவனுக்கு பத்து நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவில் திருமுறை விழா, திருவாசக விழாவும் நடைபெறுகின்றன.

மகிமலிசுரர் கோவில்

பல்லவர் காலக் கோவில். மகிமலிசுரர் கோவில். இது நகரின் நடுவேயுள்ள பழைய மருத்துவமனையையொட்டி உள்ளது. ஆறடி விட்டமுள்ள ஆவுடையாரில் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் பெரிய அளவில் காட்சியளிக்கிறது. வாயிற்காப்போர் சிலையும், கோபுரமும் பல்லவர் காலத்தவையேயாகும். துண் ஒன்றில் சுந்தரர் தாடியுடன் பரவை, சங்கிலியாருடன் காட்சியளிக்கிறார். இவருக்குச் சேரமான் கவரி வீசுகிறார். அருகில் மெய்க்காவலர் வில்லேந்தி நிற்கிறான்.

கஸ்துரி ரங்கப் பெருமாள் கோவில்

ஈரோட்டிலே கஸ்துரி ரங்கப்பெருமாள் கோவில் உள்ளது. கோபுரம் இல்லை. திருமாலின் பள்ளி கொண்ட கோலத்தை சிற்ப உருவில் வடித்துள்ளனர். இங்கு திருவேங்கட முடையான் திருச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி நிலைப்படியில் தயாகு சாத்தன் சேவித்த நினைவு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. தாயாரின் திருநாமமே கமலவல்லி நாச்சியார். மூலவரும், உச்சவரும் அருகருகே உள்ளனர். இந்த திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளது. பிரகாரத்தில் விஸ்வத்சேனர் திருப்பாதம் உள்ளது. ஆழ்வார்கள் மண்டபம் காணப்படுகிறது. அனுமார் சந்நிதி உள்ளது. 4 அடி குங்கிலியத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. மூலவர் 14 அடி இருப்பார். பள்ளி கொண்ட நாதர்தான் கஸ்துரி ரங்கப் பெருமாள். வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோச்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோவில் மண்டபங்களை 150 ஆண்டுக்கு முன்பு திருப்பணி செய்தோர்: கொண்டமல்லி சங்கய்யா நாயக்கர் மகன் சின்ன முராரி நாயக்கர், லக்காபுரம் முத்துக் குமரக் கவுண்டர். இக்கோவிலில் இன்னொரு சிறு திருப்பணியை செய்தவர்: பெரியார் ஈ.வே.ரா.வின் தாயார். வெளிப்பிரகாரத்தில் உள்ள குத்துக்கல் தெரிவிக்கும் செய்தி: "ஈ வேங்கடாசல நாயக்கர் மனைவியார் சின்னத்தாயம்மாள் தன் சிறுவாட்டுப் பணத்தால் கடப்பைக் கல் பாவிய" செய்தி வெட்டப்பட்டுள்ளது.